காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதிலாக, கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் உடல் எடை குறையும் என்கின்றது அவுஸ்திரேலிய ஆய்வுத் தகவல்.
காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடித்தால், அதிகமாக பசி ஏற்படும். பசி சீக்கிரமாக வருவதால், உணவு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை வரும். இதனால், கலோரியின் அளவும் கூடும்.
ஆனால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் எடுத்துக் கொள்ளும் போது, உணவின் அளவு குறைவதோடு கலோரியின் அளவும் குறையும். இதனால், உடல் எடையை மிக எளிதாக குறைக்க முடியும் என்கின்றனர் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள், 34 ஆண்கள் மற்றும் பெண்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். அவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
ஒரு குழுவினருக்கு பழச்சாறும், மற்றொரு குழுவினருக்கு கொழுப்பு நீக்கப்பட்ட பாலும் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 4 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் உண்மை தெரியவந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கொழுப்பு நீக்கப்பட்ட பாலில், குறைந்த அளவே புரதம் மற்றும் லாக்டோஸ் சத்துகள் உள்ளன. இவை அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதை தடைசெய்கிறது. மேலும், போதும் என்ற மனநிறைவை இது மூளைக்கு கொடுப்பதால், பசி உணர்வு தள்ளிப் போகிறது. இதனால், உணவும் குறைவாக எடுத்துக் கொள்ளும் நிலை வந்துவிடும்.
அதனால், கொழுப்பு நீக்கப்பட்ட பாலானது, உடல் எடையை குறைக்க வழி செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.