அம்மா. இந்த வார்த்தையை கேட்டால் நம்மைஅறியாமல் உற்சாகம் வரும். படுபாதக செயல் செய்கிறவன்கூட அம்மா முகத்தை பார்த்ததும் சாந்தமாகிவிடுவான். இதற்கு காரணம் என்ன? தாயின் மனநிலைக்கும் குழந்தையின் மூளை செயல்பாடுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் இணைந்து சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தின. 35 வயதை ஒட்டியிருந்தவர்களை வைத்து ஆய்வு நடந்தது. அறிமுகம் இல்லாத சிலரது போட்டோக்கள் அவர்களிடம் காட்டப்பட்டன. அப்பா, அம்மாவின் போட்டோக்களும் காட்டப்பட்டன. அவற்றை பார்க்கும்போது மூளையில் அடையும் மாற்றம் எம்.ஆர்.ஐ. உதவியுடன் கண்காணிக்கப்பட்டது. அப்பா போட்டோ பார்ப்பதைவிட அம்மா போட்டோவை பார்க்கும்போது மூளையின் உணர்தல் மற்றும் உணர்ச்சி அதிகமானது. அதாவது, அம்மாவை பற்றிய தகவல்களை கேள்விப்படும்போது பல்பின் பிரகாசம்போல் மூளை பளிச்சென சுறுசுறுப்பாகிறது.
பிறந்த பிறகு முதல்முறை அழுவது, முதல் முறை பால் குடிப்பது, முதல் முறை சிரிப்பது, கத்துவது, நடப்பது, பேசுவது என எல்லாமே குழந்தைக்கு புதிய, த்ரில்லான அனுபவம்தான். இந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு பக்கபலமாக இருந்த அம்மாவின் நினைவும் ஒவ்வொரு அனுபவத்திலும் அவள் நம்மை அரவணைத்துக் கொண்டதும் மூளையில் ஆழமாக பதிவாகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பதிவுகள் மறைவதில்லை. அதனால்தான், எத்தனை வயதானாலும் அம்மா என்றதும் மலர்ச்சி அடைகிறோம்.
கைக்குழந்தையை வளர்க்கும் காலக்கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். டென்ஷனாக, கவலையாக இருந்தால் அது குழந்தையின் அறிவாற்றலை பாதிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.