141. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால்,
அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
142. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில்
ஒழுக்கமே சிறந்த துணை என்பதால்,
எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
143. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான்
உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்.
ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள்
இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
144. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால்
மீண்டும் படித்துக் கொள்ள முடியும் ஆனால்,
பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து
அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
145. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும்
அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
146. ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால்
ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம்
குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.
147. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி.
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்
இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.
148. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக
அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
149. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச்
சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
150. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம்
எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள்
பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்