Saturday, 4 December 2010

திருக்குறள்-பிறனில் விழையாமை

151. பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை,

உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும்

ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.


152. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள்

அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை

 மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.


153. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.

நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம்

தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன்,

உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.


154. எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச்

சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது,

 எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.


155. எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

எளிதாக அடையலாம் என எண்ணிப்

பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக

நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.


156. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க

 நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி

ஆகிய நான்கும் நீங்குவதில்லை.


157. அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்.

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை

நாடிச் செல்லாதவனே அறவழியில்

இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.


158. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு.

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன்

நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று

அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.


159. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்.

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே

 கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை

அடைவதற்குத் தகுதியுடையவர்.


160. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது

அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.