Sunday 28 November 2010

திருக்குறள்- நீத்தார் பெருமை

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,

சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.


22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு

என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே

பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.


23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை

மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.


24. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும்

அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு

ஏற்ற விதையாவான்.


25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும்

மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால்

ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ்

கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.


26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர்

என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய

செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர்

என்றும் வரையறுத்துவிட முடியும்.


27. சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை

அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.


28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில்

அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி

நூல்களே எடுத்துக் காட்டும்.


29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால்

அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.


30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள்

பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.