91. இன்சொலால் ஈ.ரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,
வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின்
அதுவே இன்சொல் எனப்படும்.
92. அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து
ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
93. முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக்
கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `
நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.
95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர,
ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய
வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி
நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
97. நயன்ஈ.ன்று நன்றி பயக்கும் பயன்ஈ.ன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல
பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக்
கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும்
உண்டாக்கக் கூடியவைகளாகும்.
98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன்
வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை
உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக்
கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை
விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை
ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.