Monday, 14 February 2011

வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக்

கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து,

பழியும் வந்து சேரும்.



படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று

நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக,

பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார்.



சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப்

பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.



இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப்

பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.



அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக்

கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு

இருந்துதான் என்ன பயன்?



அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன்

தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில்

ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.



வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.

பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால்

அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.



அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால்

பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று

ஆசைப்படாமலிருக்க வேண்டும்.



அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்

திறனறிந் தாங்கே திரு.

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர்

பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.



இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள

விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால்

வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.