Monday 14 February 2011

ஒப்புரவறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்

டென்னாற்றுங் கொல்லோ உலகு.

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப்

போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள்

அல்லர்.



தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று

திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.



புத்தே ளுலகத்தும் ஈ.ண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த

பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.



ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்

கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன்

இறந்தவனே ஆவான்.



ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள்

அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.



பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

ஈ.ர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே

செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.



மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம்

சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது

போன்றதாகும்.



இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்

கடனறி காட்சி யவர்.

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும்

ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.



நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யா தமைகலா வாறு.

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன்

ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால்

பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.



ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.

பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக்

கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்

கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.