Monday, 14 February 2011

அருளுடைமை

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள.

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்;

ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.



நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை.

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய்

விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.



அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில்

உழலமாட்டார்.



மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப

தன்னுயி ரஞ்சும் வினை.

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக்

கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.



அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு

மல்லன்மா ஞாலங் கரி.

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம்

என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.



பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும்,

கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.



அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்

கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை

உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.



பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்;

மீண்டும் பெற இயலாது.



தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா?

அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.



வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேற் செல்லு மிடத்து.

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர்

முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.